கல்யாணம் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான அனுபவம்,எனக்கும் அப்படியே.புதுக் கணவன்,புதிய உறவுகள்,புதிய அனுபவம் மட்டுமில்லாமல்,புதிய நாடும்.முதல் விமானப் பயணம்.புதுத் தாலி மஞ்சள் நிறத்தில் எடுப்பாக இருந்தது.மார்பில் பட்டு குறுகுறுத்தது.ஏர்போர்ட்டிலும் அம்மா அதையே சொன்னாள்.
"மூணாவது மாசத்தில் மறக்காம தாலிய கழட்டி மாத்தனும்டீ,சுகன்யாக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டல"
"இதோட பத்தாவது முறையா சொல்லிட்டமா, எனக்கு தெரியும்மா"
அப்பாதான் கண்கலங்கினார்.அம்மா அழுத்தமானவள்,எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொள்வாள்.
விமானத்தில் சீட் பெல்ட் போட்டுவிட்டான் ரகு.டேக்-ஆப் ஆகும் போது பயமாக இருந்தது.தன்னிச்சையாக ரகுவின் கைகளை இறுக பிடித்துக்கொண்டேன்.அன்னியோன்
இமிக்ரேசனில், அந்த வெள்ளைக்கார யுவதி,
"நியுலி மாரிட்?, யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் அட்டயர்",
என்றாள்.வெட்கப் பூரிப்பில் தாங்க்ஸ் என்றேன்.
அரை மணி நேர கார் பயணத்திற்கு பின், அமைதியான சப்-அர்ப்பில்,ஓடு வேயப்பட்டஅழகான வீட்டின் முன் கார் நின்றது.ரகு தான் வீட்டை திறந்தான்.சூட்கேஸ்களை எடுத்துவந்தான்.நான் பிரமித்து நின்றேன்.அப்படியே கைகளை கட்டிக்கொண்டு, புதுக் காற்றை சுவாசித்தேன்.சூரியனின் இளஞ்சூட்டையும்,குளிரையும் ஒருசேர ரசித்தேன்.
பிப்ரவரி மாதத்தின் அழகான ஒரு மாலைப் பொழுது அது.வரவேற்க உற்றார், உறவினர் இல்லை.ஆரத்தி எடுக்க யாரும் இல்லை.
"வெல்கம் புதுப்பொண்டாட்டி.இது தான் நீ இருக்கப் போகும் குட்டி அரண்மனை"-என்று அரண்மனை சேவகன் போல் தலை சாய்த்து வரவேற்றான்.வலது கால் எடுத்து வைத்து நுழைந்தேன்.இந்த... இந்த... தருணம் சந்தோசமானது. எல்லா புதுப்பெண்ணும் இ ந்த தருணத்தின் இனிமையை நிச்சயம் அனுபவித்து இருப்பீர்கள்!!
புதுப்புடவை சரசரக்க,கை வளையல் சிணுங்க,புதுத்தாலி மார்பில் அழுந்த,என்னை இழுத்து,அணைத்து ஆத்மார்த்தமாக நெற்றியில் முத்தமிட்டு,காதலுடன் உதட்டைக் கடந்து, அப்புறம் அந்த புதுத்தேடலை,அந்த புது அனுபவத்தை,கொஞ்ச கொஞ்சமாய்...இந்த தருணத்தையும்....!!உடை சரி செய்துக் கொண்டு,ரகுவிடம் இருந்து விடுவித்துக்கொண்டு, சாளரம் திறந்து அழகான தோட்டத்தை ரசித்தேன்.பெயர் தெரியாத அந்த பறவை "கீச் கீச்" என்று என்னை அழைத்தது.சந்தோசம் திகட்டியது.அதிகாலை வானத்தை ஓவியமாக வரைந்தது போல்,வாழ்க்கை அழகாக இருக்கிறது.
"ஷ்ராவனி, உனக்காக நான் போட்ட முதல் காஃபி"-என ஒரு கோப்பையை என்னிடம் நீட்டினான்.
ரகு அலுவலகம் சென்றவுடன்,வீட்டை சுத்தம் செய்வேன்.வீட்டிற்கு அம்மாவிடம் போன் பேசுவேன்,தஞ்சாவூரில் இருக்கும்,சுகன்யா அக்காவிடமும்,சாஹம்பரியிடமும் பேசுவேன்.கொஞ்சம் டிவி பார்ப்பேன்.கொஞ்சம் அழுவேன்.
வார விடுமுறையில் லண்டன் முருகன் கோவில் போவோம். முருகனிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டு உயிர் எடுப்பான்.இரவு ஈஸ்ட் ஹாம் சரவண பவனில் சாப்பிடுவோம்.ரகுவிற்கு பிடித்தது எது,பிடிக்காதது எது என கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொள்கிறேன்.காரில் போகும் போது "உன் சிரிப்பினில்"-பச்சைகிளி முத்துச்சரம் பாடல் ரசித்துக் கேட்கிறான்.அடிக்கடி என்னைப் பார்த்து முணு முணுக்கிறான்.எண்பதுகளில் வந்த இளையராஜா பாடல் விரும்பிக்கேட்கிறான்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வரும் ராகிணிஸ்ரீ-யை ரசிக்கிறான்.அவள் உன்னை விட அழகு என என்னை வம்பிற்கு இழுக்கிறான்.மான்செஸ்டர் யுனைட்டட் அணியை சப்போர்ட் செய்கிறான்.சில சமயம் கொஞம் பியர்.கார்டன் ராம்சே சமையலையும்,எக்ஸ்-பேக்டார் நிகழ்ச்சிகளையும் அவனுடன் சேர்ந்து நானும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
சிலசமயம் அவனுடைய நெருங்கிய நண்பர்களின் பார்ட்டிக்கு அழைத்து செல்கிறான்.டான்ஸ் ப்ளோரில் எல்லோருடனும் டான்ஸ் ஆடுகிறான்.ஒருமுறை,தனியே நின்று அவனை ரசித்துக்கொண்டிருந்த என்னை , இழுத்து,இடை பற்றி, அந்த மங்கிய வெளிச்சத்தில்,மனோகரமாய் சிரித்து,காதருகே கிசுகிசுத்தான்,
"ஷ்ராவனி உன்னைப் போல் அழகான ஒரு பெண் குழந்தை வேண்டும்", என்று.
இது ஏகாந்தம்.இது எனக்கு வாழ்வின் உன்னதம்.
பாரதி சொன்னது போல எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!
நான் லண்டனில், எனது கணவனோடு சந்தோஷமாகவே இருக்கிறேன்.என்னை விட்டு பிரிந்த காதலனும்,அவனது மனைவியோடு சந்தோஷமாகவே இருப்பான்.ஏறக்குறைய சந்தோஷமாகவே இருப்பான்!!
You may read the slightly edited version in Youthful Vikatan
http://youthful.vikatan.com/youth/Nyouth/senthilkumar17092009.asp