அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
பஞ்சத்தின் நிழல் படிந்திருந்த 1930-க்ளில்
இப்படி எழுத பாரதியால் தான் முடியும்.
பாரதியின் படைப்புகள் அதிகம் படித்ததில்லை, ஆனால்
கல்லூரி நாட்களில் ஞானராஜசேகரின் "பாரதி" படம்
பார்த்ததுண்டு. பாரதியை பற்றி நிறைய படித்திருக்கிறேன்,
வியந்திருக்கிறேன்,அசந்திருக்கிறேன்.
காலத்தை கடந்த சிந்தனை,சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளின் மேல்
உள்ள கோபம்,"தமிழ் இனி மெல்லச் சாகும்", எனும் போது
தெரிகின்ற முன் கோபம், "விசையுறு பந்தினை போல்...",எனும் போது
உலகத்தை மாற்ற சக்தியை வேண்டுதல்,யோக மந்திரத்தில் தான்
சாதாரண கூட்டதை சேர்ந்தவன் இல்லை என முழங்குதல்,இலாகிரி
பழக்கங்களை தொடும் போது தெரிகின்ற ஒரு வித restlessness,
இப்படி நிறைய eccentric குணாயதிசியங்கள்.
தான் நோபல் பரிசுக்கு தகுதியானவன் என உலகிற்கு அறிவிக்கும்போது
கூட அதில் தெரிவது அவரது தன்னம்பிக்கையும்,
உலகம் உணராத உண்மையும் தான்.
தீண்டாமை இருந்த போது, "காக்கை குருவி எங்கள் சாதி"-என்று
சொன்னதால் மக்களுக்கு புரியவில்லை.சம கால மக்களால்
அறிந்து கொள்ள முடியாத மேதமைக்கும்,
அலைவரிசை ஒத்துலையாமைக்கும் யாரை குறை சொல்வது.
அதனால் தான் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துக்கொண்டாரோ என்னவோ..?
ஒவ்வொரு முறை தர்மபுரி செல்லும் போதும், ஓசூர் பேருந்து நிலையத்தில்
பேருந்து கூடவே ஓடி வந்து பழம் விற்கும் ஒரு சிறுவனை கவனித்து இருக்கிறேன்.
அவனுக்கு கீழிருந்து பேருந்தின் சன்னல்கள் கூட எட்டாது.
"என்னடா பேரு"-இது நான்.
"விஜி காந்த்..... பழம் வாங்கு சார்,ஒருபாக்கு ஒண்ணு"
"எவ்வளவு சம்பாதிப்ப ஒரு நாளைக்கு"
"எறனூறு ரூவா கெடைக்கும் சார்"
"பள்ளி கூடம் -லா போறது இல்லயா"
"எதுக்கு சார்...பழம் வாங்குறியா இல்லயா சார்,ஒருபாக்கு ஒண்ணு"
"சாயந்திரம் என்னடா பண்ணுவே...."
"எங்க தலைவர் படதுக்கு போவேன்."
அடுத்த பெங்களூர் பேருந்து வந்தது,கூடவே ஓடி
மாயமாகி விட்டான்.
எங்கோ தூரத்தில் அவன் குரல் கேட்டது.
"பழம், ஒருபாக்கு ஒண்ணு, ஒருபாக்கு ஒண்ணு"
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்......!!