Sunday, April 12, 2009

இனப்படுகொலைக்கெதிரான இலண்டன் பேரணி

உறவுகளின் உயிர் காக்கும் போராட்டம்.

லண்டனில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேரணியில் திரண்டனர்.

உடனடியானதும் நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை தேம்ஸ் நதியோர வீதிகளை மக்கள் வெள்ளத்தால் நிரப்பி மாபெரும் பேரணி ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.

பிரித்தானியாவின் சகல பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் லன்டனின் மையப்பகுதியில் நண்பகலில் கூடிவிட்டனர்.வன்னி மக்களின் அவலங்களை மனதினில் சுமந்தும் அதனைச் சித்தரிக்கும் படங்களை கைகளில் சுமந்தும் மக்கள் ஒருவகைச் சோகமும் கோபமும் கொண்ட எழுச்சியோடு கலந்து கொண்டனர்.

தாம் பயணிக்கும் போதே சிறு சிறு குழுக்களாக தமது கோரிக்கைகளை முழக்கமிட்டு வந்த மக்கள் பேரணியின் மையநீரோட்டத்தில் கலந்து கொண்டனர்.உடனடிப்போர் நிறுத்தம் , இல்லையேல் இலங்கைமீது தடைகளை கொண்டுவரவேண்டும் , இறுதித்தீர்வு இருவேறு நாடுகள் என்ற கோஷங்களை பெரும்பாலும் முழங்கிய வண்ணம் மக்கள் அணி அணியாக

சென்றனர். இந்தியாவின் மீது கசப்புணர்வுகளை கொப்பளிக்கும் வாசகங்களும் முழக்கங்களும் பெரும்பாலும் காணப்பட்டன. இலங்கைப் பெருட்களை வாங்க வேண்டாம் அது உங்கள் கைகளை இரத்தம் தோய்ந்ததாக்குகின்றது என்று மக்கள் கோஷமிட்டனர். பல இனமக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பேரிகைகள் , வாத்தியங்கள் சகிதம் வெள்ளையினத்தவர்கள் பலர் இலங்கை அரசின் இனப்படுகொலைக் கெதிராக பெருமுழக்கமிட்டது இப்பேரணியின் மிகச்சிறப்பான அம்சமாகும்.

தழிழீழ தேசியக் கொடி , தேசியத்தலைவரின் படம் என்பன பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியப் பேரணியைப் பெரிதும் அலங்கரித்திருந்தது. பிரித்தானியச் சட்டங்கள் தற்போது இவ்விடையத்தில் வளைந்து கொடுக்காது என்றாலும் காவல் துறையினர் மென்போக்கை கடைப்பிடித்தனர். எதுவித அசம்பாவிதங்கலும் கைதுகளும் அற்ற இந்த மாபெரும் பேரணி நீண்ட நேரப்பயணத்தின் பின்னர் ஹைட் பார்க் மைதானத்தை மாலையில் வந்தடைந்தது.

அகவணக்கத்துடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. தழிழ் இளையோர் அமைப்பின் சார்பாக பேசிய
 செல்வி. ராஜி , தமது சகாக்களின் உண்ணா விரத போராட்டம் தொடர்பாக எடுத்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து உரை ஆற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. வீரேந்திர சர்மா அவர்கள் வன்னியின் மருத்துவப்பற்றாக் குறைகளைப் பற்றிப் பேசியதோடு இலங்கை இராணுவம் மக்களின் மீது குண்டு போடுவதை வன்னி மருத்துவர் தமக்கு நேரடியாக உறுதி செய்ததாகக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ரெஸ்பெக்ட் கட்சியை சேர்ந்த திரு. டங்கன் சட்டன் அவர்கள் இலங்கை அரசோடு கைகுலுக்கி இராஜீய உறவுகளை வைத்துக்கொள்வதற்காக பிரித்தானிய அரசை பெரிதும் சாடினார். அத்தோடு அனைத்துலக ஊடகங்களின் பாராமுகங்களையும் கண்டித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் உண்ணா நோன்பாளர்களின் மனோதிடத்தை வியந்து பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய திருமதி பத்மினி சிதம்பரநாதன் அம்மையார் அவர்கள் ,

“ முல்லைத்தீவு அரச அதிபர் வன்னியில் 300,000 ற்கும் அதிகமான மக்கள் உள்ளனர் என்கிறார். ஆனால் இலங்கை அரசோ அங்கு 70 ,000 மக்கள் மட்டுமே உள்ளனர் என்கிறது. அப்படியாயின் ஒருபெரும் படுகொலைத்திட்டத்தின் மூலம் மீதி மக்களை கொண்டழிக்க இலங்கை அரசு திட்டமிடுகிறதோ என்று தனது சந்தேகத்தை வெளியிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜெரமி கோபின் அவர்கள் , “ 1983ம் ஆண்டு தொடக்கம் இவ்வாறு நாம் பல பேரணிகளை நடாத்துகின்றோம்.ஆனால் இன்னமும் வேற்று இனத்தவர்கள் பலரை காணவில்லை . எல்லோரும் கூடி வரவேண்டும்.அத்தோடு இலங்கை மீது தடைகளைக் கொண்டுவரவேண்டும் என்று கூறிய திரு.ஜெரமி கோபின் அவர்கள் , இன்னமும் மக்கள் இலங்கைக்கு உல்லாச பயணங்களை மேற்கொள்வதைக் கண்டித்ததார்.

உலகின் கவனத்தை ஈர்க்கவென ஆபிரிக்காவின் கிழிமஞ்சிரோ மலையில் ஏறி அங்கு தழிழீழக் கொடியை நாட்டி விட்டுத்திரும்பிய திரு . கீரன் அரசரட்னம் அங்கு உரை ஆற்றினார்.

அக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உண்ணாநிலை நோண்பாளர்களில் ஒருவரான திரு. சிவதர்சன் மேடை ஏறிய போது மக்கள் விண்னை முட்டிய கரகோஷம் செய்தனர். அங்கு பேசிய சிவதர்ஷன் , தமது மக்களுக்கு விடிவு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் ,அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு அங்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் தமிழ் , ஆங்கிலப் பேச்சாளர்களின் உரை நிகழ்ந்தது.

தொடர்ந்த அந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அன்று பெல்ங் அவர்கள் ,” எந்த நாகரீக அரசும் தனது சொந்த மக்களை இனப்படுகலை செய்யாது. ஆனால் அதை இலங்கை அரசு செய்வதனால் அவ்வரசின்மீது தடைகளைக் கொண்டுவர பிரித்தானீயா அரசானது முன் வரவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய மனித நேயப்பணியாளர் திரு டிம் மாட்டின் அவர்கள் தாம் வன்னியில் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அடுத்த நாள் வாழ்வின் நிட்சயத்தன்மை அற்ற இரவுத்தூக்கங்களை தாம் தாம் வன்னி மக்களோடு இருந்து அநுபவித்ததை உருக்கமாக எடுத்துக்கூறினார்.

அங்கு பேசிய கவுன்சிலர் டொரான் டிக்சன் அவர்கள் “ருவண்டா போல், டாவூர் போல் வன்னியும் ஆகிவிடக்கூடாது , அதற்காக சனநாயக முறையில் பிரித்தானிய மக்கள் போராடுகிறார்கள்.” என்றார்.

அடுத்து தொழிழாளர் கட்சியை சார்ந்த திரு.யூலியன் பெல் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தழிழ் ஈழத் தேசிய கொடி குறித்துப் பேசினார்.

பின்னர் கான்சவெர்ரிவ் கட்சியை சார்ந்த டாக்டர் ராச்சல் அவர்களின் செய்திபடிக்கப்பட்டது. அதில் அவர் பிரித்தானிய ஊடகங்கள் இலங்கை விவகாரங்களை உண்மைத்தன்மையோடும் நடுவுனிலைமையோடும் படம் பிடித்துக் காட்டவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

உடனடிப் போர் நிறுத்தம் வரும் வரை போராட்டம் தொடரும் என்ற உறுதி மொழியுடன் கூட்டம் நிறைவடைந்தது.

பேரணியில் வரும் போது ஈழத்தமிழிர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி, "தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் எங்களுக்காக தமிழ் நாட்டில் எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபடுவது ஆறுதலையும்,மனோபலத்தையும் அளிக்கிறது.ஆனால் காந்தி பிறந்த மண்ணில் இந்திய அரசாங்கம் தமிழர்களை கொல்ல ஆயுதங்களை வழங்குவதும்,இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல் படுவதும்,அதை தமிழக அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்" என்றார்.வெட்கப்பட்டு வேதனைப்படுவதை தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
PS: Part of the article was taken from British Tamil Forum press release


1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz